Friday, June 25, 2010

வீட்டுக்கொரு மனிதம் வளர்ப்போம்

காசு மட்டிலும் தான்
காசினியில் பிரதானமாகிடும்
கவலை தோய்ந்த உலகமிது
கணிப் பொறியினாலே காரியமாற்றி
கருணை மறந்த உலகமிது

நூறாண்டு மரத்தை வெட்டிவிட்டு
நூதனமாய்க் கன்று நடும்
நுண்ணறிவு மிக்க உலகமிது

அன்பு என்பதற்கு அகிலத்தில் விலையில்லை
அதுவும் விலை பேசப்படுகிறது
முதியோர் காப்பகங்களாய்
குழந்தை பராமரிப்பகங்களாய்

மரம் வளர்த்திட்டு,மழை காப்பது போல
மனிதம் வளர்த்து நல்மனதினைக் காண்போம்
உலகு சுற்றி வரலாம்-அணு
உலைக் களங்கள் ஆக்கலாம்
அகிலத்தையே ஆளலாம்-ஆடியே களிக்கலாம்

பக்கத்து வீடு பற்றி எரிந்திடினும்
பாராது இருந்து விடும் பண்பு?
அடுத்தவரின் அழுகையிலே
ஆர்ப்பரிக்கும் மனது?

முன்னேற்றம் கண்டிட பிறர்
முதுகில் ஏறிடுவது?
முகம் காணும் போது சிரித்து
முதுகின் பின் இகழ்வது?

அப்பா!
மனிதம் தொலைந்து கொண்டிருக்கிறது
புனிதம் கூட வேண்டாமய்யா,
விதை இருந்தால் தானே விருட்சம்?
தொலைந்த்தைத் தேடுவோம் முதலில்
பின் விதைத்திடுவோம்
அன்பு விருட்சம் வளர்ப்போம்
அது,
ஆல் போல் தழைக்கட்டும்
அந்நிழலிலே அகிலமே
சுகம் கண்டு களிக்கட்டும்.

No comments: